Genesis 25

1ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பெயர்கொண்ட ஒரு பெண்ணையும் திருமணம் செய்திருந்தான். 2அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்க்ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றெடுத்தாள். 3யக்க்ஷான் சேபாவையும், தேதானையும் பெற்றெடுத்தான்; தேதானுடைய மகன்கள் அசூரீம், லெத்தூசீம், லெயூமீம் என்பவர்கள். 4மீதியானுடைய மகன்கள் ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லோரும் கேத்தூராளின் பிள்ளைகள்.

5ஆபிரகாம் தனக்கு உண்டான அனைத்தையும் ஈசாக்குக்குக் கொடுத்தான். 6ஆபிரகாமுக்கு இருந்த மறுமனையாட்டிகளின் பிள்ளைகளுக்கோ ஆபிரகாம் நன்கொடைகளைக் கொடுத்து, தான் உயிரோடிருக்கும்போதே அவர்களைத் தன் மகனாகிய ஈசாக்கைவிட்டுக் கிழக்கே போகக் கீழ்தேசத்திற்கு அனுப்பிவிட்டான்.

7ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசு நாட்கள் நூற்று எழுபத்தைந்து வருடங்கள். 8அதற்குப் பின்பு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் இறந்து, தன் இனத்தாருடன் சேர்க்கப்பட்டான்.

9அவனுடைய மகன்களாகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் மகனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா எனப்பட்ட குகையிலே அவனை அடக்கம்செய்தார்கள். 10அந்த நிலத்தை ஏத்தின் மகன்களின் கையிலே ஆபிரகாம் வாங்கியிருந்தான்; அங்கே ஆபிரகாமும் அவனுடைய மனைவியாகிய சாராளும் அடக்கம் செய்யப்பட்டார்கள். 11ஆபிரகாம் இறந்தபின்பு தேவன் அவனுடைய மகனாகிய ஈசாக்கை ஆசீர்வதித்தார். லகாய்ரோயீ என்னும் கிணற்றுக்குச் சமீபமாக ஈசாக்கு குடியிருந்தான்.

12சாராளுடைய அடிமைப்பெண்ணாகிய எகிப்து தேசத்தாளான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற மகனாகிய இஸ்மவேலின் வம்சவரலாறு:

13பற்பல சந்ததிகளாகப் பிரிந்த இஸ்மவேலின் மகன்களுடைய பெயர்களாவன; இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத், பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம், 14மிஷ்மா, தூமா, மாசா, 15ஆதார், தேமா, யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவைகளே. 16தங்கள் கிராமங்களிலும் அரண்களிலும் குடியிருந்த தங்கள் மக்களுக்குப் பன்னிரண்டு பிரபுக்களாகிய இஸ்மவேலின் மகன்கள் இவர்களே, இவர்களுடைய பெயர்களும் இவைகளே.

17இஸ்மவேலின் வயது நூற்று முப்பத்தேழு. பின்பு அவன் இறந்து, தன் இனத்தாரோடு சேர்க்கப்பட்டான். 18அவர்கள் ஆவிலா துவங்கி எகிப்திற்கு நேராக அசீரியாவுக்கு போகிற வழியிலிருக்கும் சூர் வரைக்கும் குடியிருந்தார்கள். இது அவனுடைய சகோதரர்கள் எல்லோருக்கும் முன்பாக அவன் குடியேறின பூமி.

19ஆபிரகாமின் மகனாகிய ஈசாக்குடைய வம்சவரலாறு; ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றெடுத்தான். 20ஈசாக்கு ரெபெக்காளை திருமணம் செய்கிறபோது நாற்பது வயதாயிருந்தான்; இவள் பதான்அராம் என்னும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுக்கு மகளும், சீரியா தேசத்தானாகிய லாபானுக்குச் சகோதரியுமானவள்.

21மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்; கர்த்தர் அவனுடைய வேண்டுதலைக் கேட்டருளினார்; அவனுடைய மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள். 22அவளது கர்ப்பத்திலே பிள்ளைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன; அப்பொழுது அவள்: இப்படியிருந்தால் எனக்கு எப்படியாகுமோ என்று சொல்லி, கர்த்தரிடத்தில் விசாரிக்கப் போனாள்.

23அதற்குக் கர்த்தர்: இரண்டு இனத்தார்கள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது; இரண்டுவித இனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும், அவர்களில் ஒரு இனத்தார் மற்ற இனத்தாரைவிட பலத்திருப்பார்கள், மூத்தவன் இளையவனுக்குப் பணிந்திருப்பான் என்றார்.

24பிரசவகாலம் பூரணமானபோது, அவளது கர்ப்பத்தில் இரட்டைக் குழந்தைகள் இருந்தன. 25மூத்தவன் சிவந்த நிறமுள்ளவனாகவும் உடல்முழுவதும் ரோம அங்கி போர்த்தவன் போலவும் பிறந்தான்; அவனுக்கு ஏசா என்று பெயரிட்டார்கள். 26பின்பு, அவனுடைய சகோதரன் தன் கையினாலே ஏசாவின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டு பிறந்தான்; அவனுக்கு யாக்கோபு என்று பெயரிட்டார்கள்; இவர்களை அவள் பெற்றபோது ஈசாக்கு அறுபது வயதாயிருந்தான்.

27இந்தக் குழந்தைகள் பெரியவர்களானபோது, ஏசா வேட்டையில் வல்லவனும், காட்டில் வாழ்கிறவனாகவும் இருந்தான்; யாக்கோபு குணசாலியும் கூடாரவாசியுமாக இருந்தான். 28ஏசா வேட்டையாடிக் கொண்டுவருகிறது ஈசாக்கினுடைய வாய்க்கு ருசிகரமாயிருந்ததினாலே ஏசாவின்மேல் பற்றுதலாக இருந்தான்; ரெபெக்காளோ யாக்கோபின்மேல் அன்பாயிருந்தாள்.

29ஒருநாள் ஏசா வெளியிலிருந்து களைத்து வந்தபோது, யாக்கோபு கூழ் சமைத்துக்கொண்டிருந்தான். 30அப்பொழுது ஏசா யாக்கோபை நோக்கி: அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, களைத்திருக்கிறேன் என்றான்; இதனாலே அவனுக்கு ஏதோம் என்கிற பெயர் உண்டானது.

31அப்பொழுது யாக்கோபு: உன் பிறப்புரிமையை இன்று எனக்கு விற்றுப்போடு என்றான். 32அதற்கு ஏசா: இதோ, நான் சாகப்போகிறேனே, இந்தப் பிறப்புரிமை எனக்கு எதற்கு என்றான். 33அப்பொழுது யாக்கோபு: இன்று எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவன் யாக்கோபுக்கு ஆணையிட்டு, தன் பிறப்புரிமையை அவனுக்கு விற்றுப்போட்டான். அப்பொழுது யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங்கூழையும் கொடுத்தான்; அவன் சாப்பிட்டுக் குடித்து எழுந்து போய்விட்டான். இப்படி ஏசா தன் பிறப்புரிமையை அலட்சியம் செய்தான்.

34

Copyright information for TamULB